பக்கங்கள்

செவ்வாய், 6 டிசம்பர், 2005

அறிவியலின் வெற்றி

அமெரிக்க நீதிமன்றமொன்று அமெரிக்கப் பள்ளிகளில் அறிவார்ந்த வடிவமைப்பு (Intelligent design) என்ற மத நம்பிக்கை அடிப்படையிலான கோட்பாட்டை, பரிணாமக் கோட்பாட்டிற்கு மாற்றாக பாடமாக வைப்பதைத் தடைசெய்துள்ளது. இது ஒரு முக்கியமான தீர்ப்பாகும்.

பரிணாமக் கோட்பாடு பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களும் பரிணாமத்தால் உருவானவையே என்பதற்கு நம் கண்முன்பு பல்வேறுவிதமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அதனால் இன்னும் சில விளக்கமுடியாத பகுதிகள் உள்ளன. உதாரணமாகச் சடப்பொருள்களிலிருந்து முதல் உயிர் எவ்வாறு தோன்றியது என்பதை அதனால் இன்னும் தெளிவாக விளக்கமுடியவில்லை. அதாவது டார்வினின் கூற்றுபடி, தகுந்த சூழ்நிலைகள் உருவானபோது (A warm little pond ...) இவ்வுலகில் முதல் உயிரி தோன்றியிருக்கலாம் என நம்மால் யூகிக்கமுடிகிறதே ஒழிய, அறிவியலாளர்களால் இன்னும் சோதனைச்சாலையில் ஒரு உயிரை உருவாக்கிக் காண்பிக்கமுடியவில்லை. இதத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மத நம்பிக்கைவாதிகள், இவ்வுலகமும், அதிலுள்ள உயிர்களும், மனிதனால் அறியவேமுடியாத அதி அறிவுகொண்ட ஒருவரால் படைக்கப்பட்டது எனக்கூற ஆரம்பித்தனர். அதற்கு அறிவார்ந்த வடிவமைப்பு எனவும் பெயரிட்டனர். மேலும், அக்கோட்பாட்டை பரிணாமக் கோட்பாட்டிற்கு மாற்றாக பள்ளிகளில் போதிக்கவேண்டும் எனவும் வாதிட்டும் வந்தனர். (நம்மூர் வேதிக் மேத்தமேடிக்ஸ் மாதிரி) அமெரிக்க பென்சில்வேனிய மாகாணத்தில் தங்களால் நடத்தப்பட்டுவரும் ஒரு பள்ளியில் இதைப்புகுத்தவும் செய்தனர். அவர்களுக்கு இத்தீர்ப்பு ஒரு சாட்டையடி. இத்தீர்ப்பளித்த நீதிபதியின் கூற்று மிகவும் சிந்திக்கக்கூடியவகையில் அமைந்துள்ளது. அதாவது, பரிணாமம் பற்றிய அறிவியல் கோட்பாடு முழுமையடையவில்லை என்பதற்காக 'அறிவார்ந்த வடிவமைப்பை' அறிவியலுக்கு மாற்றாகக் கருதமுடியாது என்பதுதான் அவரது தீர்ப்பின் சாராம்சம். இது பற்றி மேலும் விபரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்.

3 கருத்துகள்:

  1. தங்கவேல்

    நல்ல பதிவு. செய்தித் தாளில் நானும் படித்தேன்.

    விஞ்ஞானத்தையும் ஆன்மீகத்தையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்வதினால் எந்த ஆதாயமும் கிடையாது.

    ஒன்று மற்றொன்றிற்கு மாற்றாக ஆகாது. ஒன்றை வைத்து மற்றவற்றை அளவிட முடியாது. கூடாது.

    ஒன்று ஆராய்ந்து, அதன் அடிப்படையில் கிடைத்த தீர்க்கமான முடிவுகளைக் கொண்டு இயங்குவது.

    மற்றொன்று, நாம் அறியாதவற்றின் மீது நம்பிக்கை வைத்து, அதன் அடிப்படையில் இயங்குவது.

    ஒன்றை உதறிவிட்டு, மற்றொன்றை மட்டும் தூக்கி நிறுத்த முனைவதால், பிரச்சினைகள் தானே தவிர, தீர்வுகள் கிட்டாது.

    பதிலளிநீக்கு
  2. தங்கவேல்,
    இந்தச் "சண்டை" நெடுங்காலமாகவே அமெரிக்க கல்வியாளர்கள் மத்தியில் நடந்து வருகிறது. என்றும் தொடரும் என்றே நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு