பக்கங்கள்

சனி, 1 ஜூலை, 2006

சபரிமலை ஐய்யப்பன் கோவில் விவகாரம்

கடந்த சில நாட்களாக சபரிமலை ஐய்யப்பன் விக்கிரகத்தைத் தொட்டு நடிகை ஜெயமாலா வணங்கினார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. கோவிலில் 'பிரசன்னம்' பார்த்த பணிக்கர் (முழுப்பெயர் தெரியவில்லை), இதனால் ஐயப்பன் கோபமடைந்துள்ளதாகவும், விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார். இந்நிகழ்ச்சி ஒருபோதும் நடக்கவில்லையெனவும், பணிக்கர்தான் நடிகையுடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்கிறார் எனவும் கோவில் நிர்வாகம் சொல்கிறது. இல்லை, கோவில் பூசாரிகள் தான் என்னை கர்ப்பக்கிருகத்திற்குள் அழைத்துச் சென்று ஐயப்ப விக்கிரகத்தைத் தொட்டு வணங்குவதற்கு அனுமதியளித்தார்கள் என நடிகையும் தெரிவித்துள்ளார்கள்.
இச்சர்ச்சையிலுள்ள பெரிய கூத்து என்னவெனில், இந்நிகழ்ச்சி ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்பு நடந்தது என பணிக்கர் தனது 'பிரசன்னத்தின்'(!?) மூலம் தற்போது கண்டுபிடித்துள்ளார். 1987-ல், தான் கருவறைக்குள் நுழைந்ததாக ஜெயமாலாவும் தெரிவித்துள்ளார். அப்படியாயின், பணிக்கரின் 'பிரசன்னத்தின்' படி, கோபமடைந்துள்ள ஐய்யப்பன் கடந்த 15 வருடங்களாக ஏன் தனது கோபத்தை வெளிக்காட்டவில்லை என்ற கேள்வியெழுகிறது (ஒருவேளை தவணை முறையில் வெளிக்காட்டுகிறாரோ - என் மனைவியின் பதில்) இந்நிகழ்ச்சி உண்மையில் நடந்ததோ நடக்கவில்லயோ அதுவல்ல நமது ஆதங்கம்; இச்சர்ச்சையின் மூலம் நம் சமூகத்தில் சில விரும்பத்தகாத மற்றும் விரும்பத்தகுந்த விளைவுகள் ஏற்படலாம். முதலில் விரும்பத்தகாத விளைவுகள் என்னவென்று பார்க்கலாம்.
இச்சர்ச்சையை, பரபரபிற்காக ஊடகங்கள் வெளியிடுவதால் மக்களுக்கு சோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளில் மேலும் நம்பிக்கை பெருக வாய்ப்புள்ளது. இதனால் சோதிடர்களுக்கு, குறிப்பாக மலையாள சோதிடர்களுக்கு, அரசியல்வாதிகள், செல்வந்தர்கள், அதிகாரிகள் மற்றும் சாமானியர்கள் மூலம் செல்வம் கொழிக்கும். (தமிழன் மூலம் மலையாளிகளுக்கு செல்வம் சேர்வதை ஒரு தமிழனாக இருந்துகொண்டு நாம் எதிர்க்காமல் இருப்பதா?)
மேலும், பெண்கள் ஐய்யப்பன் கோவிலுக்குள் நுழைவது குறித்து கடுமையான சட்டதிட்டங்களை கோவில் நிர்வாகம் ஏற்படுத்தவேண்டும் என்கின்ற ரீதியில் பொதுவுடைமையாளர்கள் ஆட்சி செய்யும் கேரள மாநில அமைச்சரொருவர் பேசியுள்ளதால், ஏற்கனவே கட்டுப்பெட்டித்தனங்கள் நிறைந்த சபரிமலையில், மேலும் பல, காலத்திற்கு ஒவ்வாத, பெண்களுக்கெதிரான வழிமுறைகள் பின்பற்றப்படவும் வாய்ப்புண்டு.
சாதகமான விளைவு என்னவாகயிருக்கலாம் எனில், கர்நாடக சட்டசபையில் (ஒரு கன்னடப் பெண்ணை முன்வைத்து) நடைபெற்றுள்ள விவாதத்தைச் சொல்லலாம். இதன் எதிரொலியாக (அரசியல் நெருக்கடிகளால்), திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பெண்களும் நுழையலாம் என்று விதிமுறைகளைத் தளர்த்தவும் வாய்ப்புள்ளது.
எது எப்படியோ, சபரிமலை ஐய்யப்பன் கோவில் குறித்து பல மர்மங்கள் மக்களால் தெரிந்தோ தெரியாமலோ காப்பாற்றப்பட்டு வருகின்றன. அவையே இக்கோவில் தொடர்ந்து பிரபலமாக இருப்பதற்கு ஒரு காரணம் எனில் அது மிகையன்று. 'மகர ஜோதி' போன்ற புதிர்கள் அவிழ்க்கப்பட்டாலும், ஐய்யப்பன் தொடர்ந்து தனது பிரபலத்தைத் தக்கவைத்துக் கொண்டுதானிருக்கிறார். பெண்களும் தனது கோவிலுக்குள் நுழையலாம் எனத் தேவஸ்வம் போர்டு முடிவெடுத்தாலும், மணிகண்டன் கோபப்படமாட்டார். மாறாக, சமூகத்தில் சரிபாதியுள்ள ஒரு இனம் தன்னைத் தரிசிப்பது குறித்து மகிழ்ச்சியடைவார்.

9 கருத்துகள்:

  1. yes I agree with you there are advantages and disadvantages,

    Advantages are once women are allowed in the temple first the income will be doubled and every where you can see the books and cassetts that will pop up for the mercy that are shown on women by Iyyappan.

    Disadvantage : As like any other religious place Tirupathi, Velankanni, haridhwar, Varanasi, Prostitution will become very big bussiness.

    பதிலளிநீக்கு
  2. //(தமிழன் மூலம் மலையாளிகளுக்கு செல்வம் சேர்வதை ஒரு தமிழனாக இருந்துகொண்டு நாம் எதிர்க்காமல் இருப்பதா?)//

    தேவுடா தேவுடா :))

    பதிலளிநீக்கு
  3. Dear Anonymous,
    I don't agree with you, especially your comment on prostitution in religious places and the accusation of women.

    பதிலளிநீக்கு
  4. முத்து

    தங்கள் வருகைக்கு நன்றி. வேண்டுமென்று கிண்டலுக்குத்தான் நான் அந்த வரிகளைச் சேர்த்தேன்.
    //(தமிழன் மூலம் மலையாளிகளுக்கு செல்வம் சேர்வதை ஒரு தமிழனாக இருந்துகொண்டு நாம் எதிர்க்காமல் இருப்பதா?)//

    ஆயினும், அதில் ஒரு நுண்ணரசியல் உள்ளதை நீங்கள் அவதானித்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. //பெண்களும் தனது கோவிலுக்குள் நுழையலாம் எனத் தேவஸ்வம் போர்டு முடிவெடுத்தாலும், மணிகண்டன் கோபப்படமாட்டார். மாறாக, சமூகத்தில் சரிபாதியுள்ள ஒரு இனம் தன்னைத் தரிசிப்பது குறித்து மகிழ்ச்சியடைவார்.//

    முழுமையாக இக்கருத்தை ஏற்கிறேன் தங்கவேல்

    //கோவிலில் 'பிரசன்னம்' பார்த்த பணிக்கர் (முழுப்பெயர் தெரியவில்லை), //

    உன்னிகிருஷ்ண பணிக்கர்

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் தங்கவேல்!
    நல்ல பதிவு!

    //பெண்களும் தனது கோவிலுக்குள் நுழையலாம் எனத் தேவஸ்வம் போர்டு முடிவெடுத்தாலும், மணிகண்டன் கோபப்படமாட்டார்.//

    எத்தனை பெண்கள் இதை ஏற்று முன்வருவார்கள் என தெரியவில்லை. அவர்களுக்குளே இருக்கும் மூடநம்பிக்கை, அதனால் ஏற்படும் அச்சம் அவர்களை தடுக்கலாம். அதுவும் சிறிது நாட்கள் தான்.

    புதுமை பெண்களை அல்லது இக்கால பெண்களை அடக்க அக்கால பெண்கள் இன்னும் சில வீடுகளில் இருக்கத் தான் செய்கிறார்கள். இவர்களுக்கு யாராவது புத்திமதி சொன்னால் நன்றாகத் தான் இருக்கும்.

    நன்றி!

    பதிலளிநீக்கு
  7. நரியா,
    தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மகளிர் சபரிமலையில் அனுமதி மறுப்பிற்கு அறிவியல் சார்ந்த காரணங்களும் உள்ளன. இந்த இணைய தளத்தை பார்வையிடவும்

    www.SaranamAyyappa.org

    பதிவர்களாகிய நாம் அரசியல் வியாதிகளின் தவறான பிரசாரத்தைக் கண்டு மயங்காமல் தெளிவாக சிந்தித்து அனைவருக்கும் சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.


    என்பது உலகப்பொதுமறை அளித்த திருவள்ளுவரின் வாக்கு

    பதிலளிநீக்கு