பக்கங்கள்

செவ்வாய், 6 மார்ச், 2007

நீங்கள் குடும்பத்துடன் இலவசமாக கோவா செல்லவேண்டுமா...!?

கடந்த சிலநாட்களுக்கு முன்பு என் இணையருக்கு (அதாங்க மனைவிக்கு) கைத்தொலைபேசியில் ஒரு அனானிமஸ் அழைப்பு. மறுமுனையில் பேசிய பெண் தங்கள் நிறுவனம் ஒரு survey செய்வதாகவும், அதற்காகச் சில கேள்விகளும் கேட்டிருக்கிறார். கேள்வி என்னவென்றால், அவருக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா, வயது என்ன, குடும்பத்தின் மாத வருமானம் என்பவைதான். என் துணைவியார் மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்லியவுடன், நன்றி என்று கூறி மறுமுனையில் இணைப்பைத் துண்டித்துவிட்டனர். பிறகு மறுநாள் மீண்டும் அதே பெண்ணிடமிருந்து அழைப்பு. என் துணைவிக்கு சீட்டுக் குலுக்கலில் பரிசு விழுந்திருப்பதாகவும், பரிசு என்னவென்றால் விபத்துக் காப்பீடு இலவசமாகத் தருவார்கள் என்பதே.

என் துணைவி யோசித்துச் சொல்கிறேன் என்று சொன்னவுடன், மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து மறுபடியும் அதே பெண்ணிடமிருந்து அழைப்பு. அதற்குள் என் துணைவியார் என்னைத் தொடர்பு கொண்டு இந்த விசயம்பற்றி கூறியிருந்தார். இம்முறை அவர் என் கைத்தொலைபேசி எண்ணைக் கொடுத்து என்னிடம் விளக்கும்படி கூறிவிட்டார்.

பின்னர் என்னை அப்பெண் அழைத்ததும், நான் சில மேலதிக விளக்கங்கள் கேட்டேன். அதற்கு, இன்று மாலை குலுக்கலில் வெற்றிபெற்ற 20 பேருக்காக ஒரு சிறிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு வந்தால் விளக்கங்கள் கிடைக்குமெனவும் கூறிவிட்டார். அவரிடம் அவர்களது இணையதள முகவரி கேட்டுப்பெற்று கொண்டேன். இனையத்தில் எனக்கு ஒன்றும் பெரிதாக விளக்கங்கள் இல்லை. அப்பெண் அவர்களது நிறுவனம் ICICI Prudential காப்பீட்டு நிறுவனத்தின் ஒரு அங்கம் என்று தெரிவித்திருந்தார். ஆனால், இணையத்தில் அப்படியொன்றும் தகவல்கள் இல்லை.

காப்பீட்டுப் பாலிசியை இன்று மாலைக்குள் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் எனக் கூறியிருந்தார்கள். எனக்கு இந்தமாதிரி இலவச பரிசுகளில் சுத்தமாக நம்பிக்கை இல்லாததாலும், சற்று கூட பிற மனிதர்களின் கருத்தை/நேரத்தை மதிக்காமல்/அறியாமல் தனது நிறுவன வியாபார வெற்றிக்காக அவர்கள் செய்யும் அறநெறியற்ற முறைக்காகவும் அக்கூட்டத்திற்குச் செல்லவில்லை.

பின்னர் இன்று காலை ING Vysya வங்கியிலிருந்து என் கைத்தொலைபேசிக்கு ஒரு அழைப்பு. என்னவென்றால், என்னுடைய கைத்தொலைபேசி எண்ணிற்குப் பரிசு விழுந்திருப்பதாகவும், பரிசு நான் குடும்பத்துடன் இரண்டு நாட்கள் கோவா செல்வதற்கு மேற்குறிப்பிட்ட வங்கி நல்கை (Sponsor) அளிப்பதாகவும் கூறினார்கள். நான் எப்படி என் எண்ணைப் பெற்றீர்கள் எனக் கேட்டபோது, Airtel, Hutch, Aircel போன்ற நிறுவனங்களின் எண்களை survey செய்து, அதில் ஒவ்வொரு நிறுவன எண்களிலும் தலா 20 எண்கள் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அதில் உங்கள் எண்ணும் ஒன்று எனவும் கூறினார்கள். அந்த survey-ப்படி அந்த எண்ணுள்ள நபர் திருமணமாகியிருக்க வேண்டும், மாத வருமானம் ரூபாய் 12,000 ற்கு மேலிருக்க வேண்டும், வயது 25 முதல் 45 ற்குள் இருக்க வேண்டுமென்பதே மூன்று நிபந்தனைகள்.

என்னிடம் அவர்கள் முதல்நாள் survey ஏதும் செய்யவில்லை. என் மனைவி முன்பு கொடுத்த என் கைத்தொலைபேசி எண்ணை வைத்துக்கொண்டு அவர்கள் ஆசை காட்டுகிறார்கள் என்று புரிந்து கொண்டேன். இவ்வாறு எனது ஒப்புதல் இல்லாமலேயே எனது எண்ணை survey ல் சேர்த்ததாக அவர்கள் உட்டலாக்கடி விட்டதாலும், இத்தகைய இலவசங்களின் பின்னுள்ள பிற மோசடிகளாலும் நான் இதில் எனக்கு விருப்பமில்லை எனக் கூறி தொடர்பைத் துண்டித்துவிட்டேன். இப்பொழுது கொஞ்ச நாட்களாக, கிரெடிட் கார்டு போய் இந்தமாதிரி இலவச பரிசுத் திட்டங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இவற்றை ஒழுங்கு செய்ய அரசாங்கம்தான் முன்வர வேண்டும்.

2 கருத்துகள்:

  1. தங்கவேல்,

    நல்ல எச்சரிக்கைப் பதிவு ... இது போல் தூண்டில்கள் சிங்கையிலும் உண்டு.

    முன்பெல்லாம் கட்டங்கள் - கணக்கு -பரிசு என்று பாக்கியாவில் வெளிவரும் நோய்டா(Noida - டெல்லி) ஏமாற்று பேர்வழிகள் தந்திரமாக புதிய தொழில் நுட்பத்துக்கு மாறி இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  2. இந்த பட்டிக்காட்டுப் பதர்களுக்கு TRAI வைத்த ஆப்பு:

    http://ndncregistry.gov.in/ndncregistry/index.jsp

    இன்றைய நாளிதழ்களிலும் ("The Hindu") இதன் பொது நலன் விளம்பரத்தைக் காணலாம்.

    பதிலளிநீக்கு