பக்கங்கள்

புதன், 25 ஏப்ரல், 2007

சிசேரியன் பிரசவங்கள் - ஒரு பார்வை

நீண்ட நாட்களாக எழுத நினைத்து, சோம்பேறித்தனத்தினால் இதுவரை எழுதாமல் இருக்கும் விடயங்களில் இதுவும் ஒன்று. நேற்று CNN IBN தொலைக்காட்சியில் சிசேரியன் பிரசவங்கள் குறித்த ஒரு தொகுப்பு நிகழ்ச்சியைப் பார்த்ததால் தூண்டப்பட்டு இவ்விடுகையை இடுகிறேன்.

உலகம் முழுதும், குறிப்பாக வளரும் நாடுகளில், சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் எந்த ஒரு நாட்டிலும், எக்காரணத்தைக் கொண்டும், சிசேரியன் பிரசவங்கள் 15 விழுக்காட்டிற்குமேல் இருக்கக்கூடாது என்று சொல்கிறது. ஆயினும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் இது உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடும் அளவைவிட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதற்கான முதன்மையான காரணியாக பலரும், குமுகவியலாளர்கள் முதல் பொதுமக்கள் வரை, கருதுவது மருத்துவர்களின் பணம் கொள்ளையடிக்கும் ஆசைதான் என்பது. இது பெரிதும் உண்மைதான் என்றாலும் மேலும் பல காரணிகளும் இவ்விசயத்தில் தொழிற்படுகின்றன.

பொதுவாக சிசேரியன் பிரசவங்கள் மகப்பேறு காலத்தில் தாய், சிசு ஆகிய இருவரின் மரணத்தைத் தவிர்ப்பதற்காகவே (Perinatal death) மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால் மிக அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறும் நாடுகளில் இன்னமும் மகப்பேறு காலத் தாய், சிசு மரணங்கள் அதிகமாகவேயுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துள்ள அளவிற்கு மகப்பேறு கால தாய், சிசு மரணங்கள் குறையவில்லை என்பதுதான் உண்மை. அப்படியானால் சிசேரியன் பிரசவங்கள் தேவையற்றமுறையில் செய்யப்படுகிறதா என்ற இயல்பான அய்யத்தை இப்புள்ளி விபரம் எழுப்புகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மருத்துவக் கல்லூரியின் பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் சென்னையின் தனியார் மருத்துவ மனைகளில், அரசு மருத்துவமனைகளைவிட மூன்று மடங்கு சிசேரியன் பிரசவங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்தது. இது மருத்துவர்களின் பணம் பண்ணும் ஆசை என்ற வாதத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக உள்ளது. அதேபோல் சென்னை சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் நடத்திய வேறு ஒரு ஆய்வில் சென்னை அண்ணாநகரில் உள்ள நடுத்தர, உயர் நடுத்தரக் குடும்பங்களில் சிசேரியன் பிரசவங்கள் பரவலாக உள்ளதாகத் தெரியவந்தது.

மேலும் சில ஆராய்ச்சிகள் இன்றைய நடுத்தரவர்க்கத் தாய்மார்கள் தாங்களாகவே முன்வந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்ற உண்மையையும் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. இதற்கு முதன்மையான காரணம் பிரசவ வலியின் வேதனையை அவர்களால் தாங்கமுடியாததுதான் என்றாலும், சில தாய்மார்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தனது அந்தஸ்த்திற்கான ஒரு குறியீடாகக் கொள்வதாகச் சில ஆய்வுகள் சற்று திடுக்கிட வைக்கின்றன. (அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பெருமையாக சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்).

இன்னொரு முக்கியமான விசயம் ஜோசியம் என்ற மூடநம்பிக்கையினால் விளைவது. சில குடும்பங்கள் தங்கள் ஜோசியர்களிடம் ஆலோசனை கேட்டு சிசேரியன் மூலம் இன்ன நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என நினைத்து மகப்பேறு மருத்துவர்களிடம் சிசேரியன் பிரசவம்தான் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதும் நடைபெறுவதுமுண்டு.

இதுகுறித்து முழுமுற்றான அறிவியல் முறையிலமைந்த இடுகையொன்றை விரவில் எழுதலாமென்றிருக்கிறேன்.

10 கருத்துகள்:

  1. ஸ்ஸ்... அப்பாடா.. இதுக்கே கண்ணைக் கட்டுது..

    கொஞ்சம் பத்தி பிரிச்சி எழுதக் கூடாதா?

    கட்டுரை நல்லா இருக்கு, ஏற்கனவே நாம பேசிய விசயங்கள் தான் என்றாலும்..

    பதிலளிநீக்கு
  2. "இன்னொரு முக்கியமான விசயம் ஜோசியம் என்ற மூடநம்பிக்கையினால் விளைவது. சில குடும்பங்கள் தங்கள் ஜோசியர்களிடம் ஆலோசனை கேட்டு சிசேரியன் மூலம் இன்ன நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என நினைத்து மகப்பேறு மருத்துவர்களிடம் சிசேரியன் பிரசவம்தான் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதும் நடைபெறுவதுமுண்டு" This is the highest level of ignorance.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு புளிய மரம்.நன்றிகள்.

    "மேலும் சில ஆராய்ச்சிகள் இன்றைய நடுத்தரவர்க்கத் தாய்மார்கள் தாங்களாகவே முன்வந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்ற உண்மையையும் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. இதற்கு முதன்மையான காரணம் பிரசவ வலியின் வேதனையை அவர்களால் தாங்கமுடியாததுதான்"

    "சென்னையின் தனியார் மருத்துவ மனைகளில், அரசு மருத்துவமனைகளைவிட மூன்று மடங்கு சிசேரியன் பிரசவங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்தது. இது மருத்துவர்களின் பணம் பண்ணும் ஆசை என்ற வாதத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக உள்ளது".

    எனது அனுபவத்தில் இவை இரண்டும் மிகச் சரியான காரணங்கள்.
    என்றென்றும் அன்புடன்,
    பா. முரளி தரன்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கட்டுரைக்கு ஒரு "ஓ". அடுத்த பகுதிகளை எதிர்பார்த்து...

    பதிலளிநீக்கு
  5. /இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் இது உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடும் அளவைவிட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன./
    This is a problem in U.S. as well.

    பதிலளிநீக்கு
  6. இது பற்றி உங்கள் இயக்கமான ஆர்.எஸ்.எஸ் சொல்வது என்ன ?

    பதிலளிநீக்கு
  7. நல்ல நல்ல கட்டுரையெல்லாம் எழுதப்போறேன் எழுதப்போறேன்னு சொல்லி ஆர்வத்தை ஊட்டி காலம் தாழ்த்திக்கொண்டிருக்கும் உங்களுக்கு கன்ஸ்யூமர் அமைப்பிலிருந்து ஏதாவது நோட்டீஸ் கீட்டீஸ் அனுப்பலாமா என்று யோசிக்கிறேன்.:))))))))). நல்ல கட்டுரை தங்கவேல் அல்லது ரொம்ப நல்ல ஒரு தொடருக்கான சூப்பர் தொடக்கவுரை. எழுதுங்க டைம் கிடைக்கிறப்ப.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா12 மே, 2007 அன்று AM 11:43

    poongothai

    I use to read your article in blog whenever i find time. Really it is very nice. Your way of literature sounds your very much interested in public awarness. I too have many ideas. but i dont find time to write due to my domestic work. Small suggestion sir when you write through blog only few members will study this article, if you write in newspapers or magazines lot of them will read this. Expecting more topics from you.

    பதிலளிநீக்கு
  9. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. சில அலுவலக, சொந்த வேலைகளால் விரிவான பதிலை யாருக்கும் தரமுடியவில்லை. மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு