பக்கங்கள்

வெள்ளி, 26 மார்ச், 2010

தஞ்சைப் பெருவுடையார் கோவில் - சில குறிப்புகள்

நேற்று ஒரு வலைத்தளத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது இக் காணொளிக் காட்சியைப் பார்த்தேன். ஏற்கனவே டிஸ்கவரி தொலைக்காட்சியிலும், பிறிதொருமுறை மின்னஞ்சலில் யாரோ அனுப்பியும் இதைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் முழுமையாகப் பார்த்ததில்லை. எப்படி நாவல், சிறுகதை படிக்க ஒரு மனப்பதிவு வேண்டுமோ அப்படியே இது போன்ற வரலாற்று ஆவணங்களையும் பார்க்க படிக்க அதற்கென்று ஒரு மனநிலை அவசியம் வேண்டும். நம்ம ஊர் விட்டு வேறு ஊர் வந்தபின்புதான் அதற்கான மனநிலை எனக்கு வாய்க்கப் பெற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இக்காணொளி ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவில் அழகையும் அதன் கம்பீரத்தையும் குறித்து பேசும் அதே வேளையில்அது எவ்வாறு கட்டப்பட்டிருக்க வேண்டும், ஏன் அதை ராஜ ராஜ சோழன் கட்டுவித்தான் என்பதற்கான ஊகத்தையும் அளிக்க முயல்கிறது. வழக்கமாக மேலைத்தேய ஆராய்ச்சியாளர்கள் நம் பண்பாட்டை புரிந்துகொள்வதற்கான முயற்சிதான் எனினும் சில காரணங்களுக்காக இதை இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் அவசியம் பார்க்க வேண்டும்.

காட்டுக்குள் மறைந்துகிடந்த கஜராஹுவா கோயில்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் கண்டுபிடிப்பதிலிருந்து ஆரம்பமாகும் இக் காணொளி பின்னர் இந்தியா என்றாலே தாஜ்மகால் மற்றும் வட இந்தியா என்றளவிலேயே பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கொண்டிருப்பது தவறு என்றும் தென்னிந்தியாவிலேயே இன்னும் நிறைய ஹிந்துக்களின் பண்பாட்டுச் சின்னங்கள் உள்ளன என்ற ரீதியில் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து தஞ்சைப் பெருவுடையார் கோவிலை வாநூர்தியிலிருந்து எடுக்கப்பட்ட காணொளி மூலம் காட்டுகிறார்கள். பிரமிக்க வைக்கும் காட்சியிது. இத்தகைய காட்சிகளுக்காகவே இதைப்பார்க்கலாம்.
கோவில் கோபுர உச்சியில் ஒவ்வொன்றும் நாற்பது டன் எடையுள்ள இரண்டு கிரானைட் கற்களாலான விமானத்தை எவ்வாறு ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அவ்வளவு உயரத்தில் கொண்டு வைத்திருப்பார்கள் என்பதை சில யானைகளைக் கொண்டு ஒரு ஊகம் மூலம் நிகழ்த்திக்காட்ட முயற்சித்திருக்கிறார்கள். நான் மிகச் சிறிய வயதில் இருந்தபோது என் தந்தை பெருவுடையார் கோவிலைக் கட்டுவிக்க ராஜ ராஜன் பல மைல்கள் தொலைவிலிருந்து மலையைப் பெயர்த்து கல்கொண்டுவந்தான் என்று சொல்லியிருக்கிறார்கள். பின்னர் சாரப் பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் கட்டி அதை கோபுர உச்சியில் வைத்தான் என்பதையும் அறிந்திருக்கிறேன். ஆனால் இதில் வெறும் 25 டன் எடையுள்ள ஒரே ஒரு கிரானைட் கல்லை இரண்டடி நகர்த்த மூன்று யானைகளும் பல மனிதர்களும் படும் பிரம்மப் பிரயத்தனத்தைப் பார்த்தபோது நம் முன்னோர்களின் தொழில் நுட்ப அறிவை வியந்து எனக்கு பொல பொலவென்று கண்ணீர் வந்துவிட்டது. நமது அறிவியலும், கலைகளும் ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எவ்வளவு உச்சத்தில் இருந்திருக்கின்றன! இவ்விவரணப் படத்தின் இடையிடையே இவ்வாறு ராஜ ராஜன் இந்தக் கோவிலைக் கட்டுவிக்கும்போது ஐரோப்பா இருண்டு கிடந்தது என்று வரும் வருணனைகளும் நம்மை மேலும் வியக்கவைக்கின்றன.
என்னளவில் ஒரு தமிழனாக இதுவே இந்த விவரணப் படத்தின் வெற்றி என்பேன். பின்னர் வரும், ஏன் தென்னாட்ட்டு கோவில்கள் மேற்கத்தியர்களால் அவ்வளவாக கண்டு கொள்ளப்படவில்லை என்பதற்கு விக்டோரியன் ஒழுக்கவியலைக் காரணம் காட்டி இப்படம் நிகழ்த்தும் ஊகங்கள் சரியல்ல எனினும், என்னளவில் தனது பண்பாடு, அறிவியல், கலை பாரம்பரியம் குறித்து பெருமை கொள்வதற்கான புறவயச் சான்றுகளில் ஒன்றாக உள்ள இக்கோவிலைப் பற்றி எடுக்கபட்டுள்ள இப்படம் ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம். வெறும் 250-300 வருடப் பாரம்பரியமேயுள்ள ஒரு நாட்டில் தற்போது இருந்துகொண்டு இப்படத்தை பார்த்தது மேலும் என்னை ஆட்கொண்டுவிட்டது.
அலெக்ஸ்சாண்டர், நெப்போலியன், அசோகன், அக்பர் போன்ற மன்னர்கள் அறியப்பட்ட அளவிற்கு ராஜராஜன் அறியப்படவில்லை. இந்தியாவில் வேறு எந்த சக்கரவர்த்தியும் செய்யாத சாதனையாய் கப்பற்படை கொண்டு தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றை ஒரே குடையின் கீழ் ஆட்சிசெய்த அவரை நாம் சரியாக தெரிந்துகொள்ளவில்லை என்றே நம்புகிறேன். அசோகர் மரம் நட்டார், குளம் வெட்டினார், சாலைகள் அமைத்தார் என்று வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் படித்த அளவிற்கு ராஜராஜ சோழன் பற்றி அறியவில்லை.

பள்ளிப்படிப்பை முடித்து இத்தனை வருடங்கள் கழித்துத்தான் அருண்மொழித் தேவருடைய நீதி நிர்வாகம், வரிவசூல், ஆட்சியமைப்பு, மருத்துவ சேவைகள், நில அளவை முறைகள்,கப்பற்படை போன்றவற்றை அறிகின்றேன். வரலாறு இன்னும் வடக்கிலிருந்தே எழுதப் படுகிறது என்பதற்கு இதுவே மிகச் சிறந்த சான்று. சில வருடங்களுக்கு முன்பு மருத்துவர் தெய்வ நாயகம் வங்கக் கடல் என்பதே சோழர்களின் வங்கம் (தமிழில் கப்பலுக்கு வங்கம் என்று இன்னொரு பெயருண்டாம்) பாய்ந்து சென்றதால் உண்டான பெயர், நாம் அதை வங்காள விரிகுடா என்று படித்துக்கொண்டிருக்கிறோம் என்றும் சொன்னார். சில மாதங்களுக்கு முன்பு லா ரீயுனியன் தீவில் 150-200 வருடங்களுக்கு முன்பு பிரஞ்சுக்காரர்களால் குடியமர்ததப்பட்ட தமிழர்களின் இன்றைய நிலை குறித்து கலிபோர்னியா பெர்க்கிலி பல்கலைகழகம் வெளியிட்டுள்ள கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தபோது, அத்தீவிற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சோழர்களின் கடற்படை வந்திறங்கி எரிமலைகளைக் கொண்ட அத்தீவை தீமைத் தீவு என்று பெயரிட்டதாகவும், அது பற்றிய குறிப்பு தஞ்சை பெரியகோவில் கல்வெட்டில் இருப்பதாகவும் அறிந்தபோது நான் அடைந்த வியப்பிற்கு அளவேயில்லை. தென்மேற்குப் பருவக் காற்றின் துணைகொண்டு தென்கிழக்காசிய நாடுகளை ராஜராஜனும்,முதலாம் ராஜேந்திரனும் வென்றார்கள் என்று படித்திருந்த போதிலும் தமிழகத்திற்கு மேற்கில் தொலைதூரத்தில் மடகாஸ்கருக்கு அருகிலுள்ள ஒரு சின்னஞ்சிறிய தீவில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சோழர்களின் நாவாய்ப் படை சென்றிரங்கியிருக்கிறது என்று அறியும்போது வியப்பு மேலிடாமலில்லை. ஸ்பானியர்களும், போர்த்துக்கீசியர்களும், ஆங்கிலேயர்களும், பிரஞ்ச்சுக்காரர்களும் கடலாதிக்கம் செலுத்துவதற்கு ஐனூறு ஆண்டுகளுக்கு முன்பே கடற்படையில் சிறந்துவிளங்கிய தமிழர் வீரமும், அறிவியலும் நினைத்துப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது.

நான் பணகுடியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது பள்ளியிலிருந்து தஞ்சைக்கு கல்விச் சுற்றுல்லா கூட்டிச் சென்றார்கள். தென்பாண்டி நாட்டை பூர்வீகமாகக் கொண்டவனும், பாண்டிய நாட்டின் தலைநகரமாய் விளங்கிய மதுரையம்பதியில் 10 வருடங்கள் வாழ்ந்தவனுமாதலால் எனக்கு அப்போதெல்லாம் தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே மிகப்பெரிய அரசன்; மதுரை மீனாட்சியம்மன் கோவிலே மிகப் பெரியதும், சிறந்ததுமான கோவில் என்ற எண்ணம் உண்டு. எனவே வகுப்பு நண்பர்களிடம் தஞ்சை கோவிலின் அமைப்பு பிடிக்காமல் மீனாட்சியம்மன் கோவிலின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லிய நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரது திருமணத்திற்காக குடும்பத்துடன் தஞ்சை சென்றிருந்த போது இவ்வெண்ணம் முற்றிலும் இல்லாமலாகி திருமணத்திற்குச் செல்வதைவிடவும் எனக்கு பெரிய கோவிலை என் கேமாராவில் படமெடுப்பதில்தான் அதிக ஆர்வமிருந்தது.
சென்னையிலிருந்து கிளம்பும்போதே கோவிலைப் படமெடுக்க தனியாக ஒருநாள் செல்லவேண்டுமென தீர்மானித்து விட்டிருந்தேன். அதன்படியே முதல்நாள் குடும்பத்துடனும், மறுநாள் நான் மட்டும் தனியாகச் சென்றும் கோவிலைப் படமெடுத்துத் தள்ளினேன். எத்தனையோ கோணங்களில் படமெடுத்தாலும் இன்னும் எடுக்க வேண்டும் என்று பேராசை நீடிக்கிறது. நாள் முழுக்க கோவிலின் அழகையும், கம்பீரத்தையும் ரசித்துக் கொண்டிருக்கலாம் எனத் தோன்றியது. எவ்வாறு 15 வருடங்களுக்கு முன்பு தாஜ்மகாலைப பார்த்து அதிசயித்து நின்றேனோ அதற்கிணையான அனுபவத்தை பெரிய கோவில் அளித்தது.
தாஜ்மகாலை விட மனதிற்கு நெருக்கமாக பெரிய கோவிலை உணர்ந்தேன். ஒவ்வொரு படம் எடுக்கும் போதும் கோவிலின் அழகை ரசித்து ரசித்து எடுத்தேன். அன்று பார்த்து வானம் தெளிவாகயில்லையே என வருண பகவானை நினைத்து ஆதங்கப்பட்டேன். மேலும் என் கேமராவினால் நான் நினைத்த மாதிரி சில காட்சிகளை எடுக்க முடியவில்லை. அடுத்தமுறை செல்லும்போது SLR புகைப்படக் கருவி ஒன்றை வாங்கியபின் செல்லவேண்டுமென முடிவெடுத்துள்ளேன். என் மகன் அமுதனை கோவிலின் முகப்பில் வைத்து படம் எடுக்கும்போதும், ராஜராஜன் மனிமண்டபத்திலுள்ள அவரது சிலையின் பீடத்தில் அமுதனை உட்கார வைத்து எடுத்த போதும் மிகுந்த பரவச நிலையை அடைந்தேன். ஆயிரம் வருட பண்பாட்டுத் தொடர்ச்சி என்பதனுடன் அமுதன் பிறந்ததும் அருண்மொழிவர்மன் பிறந்த ஐப்பசி மாத சதய நட்சத்திரம் என்பதும் எனது பரவசத்திற்கு கூடுதல் காரணம்.

நான் எடுத்த மேலும் சில புகைப்படங்கள்









மேலும் விபரங்கள் அறிய:
1. ராஜராஜன் சதய விழா குறித்த தகவல்கள்
2. ராஜராஜன் மற்றும் தஞ்சைப் பெரிய கோவில் அமைப்பு பற்றிய தகவல்களுக்கு
3. கோவிலின் கர்ப்ப கிருகத்தினுள் உள்ள சோழர், நாயக்கர் காலச் சித்திரங்கள், அதை புகைப்படம் எடுத்த முறை குறித்து அறிய
4. அச்சித்திரங்களைப் பார்க்க

2 கருத்துகள்:

  1. // அத்தீவிற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சோழர்களின் கடற்படை வந்திறங்கி எரிமலைகளைக் கொண்ட அத்தீவை தீமைத் தீவு என்று பெயரிட்டதாகவும், அது பற்றிய குறிப்பு தஞ்சை பெரியகோவில் கல்வெட்டில் இருப்பதாகவும் அறிந்தபோது //

    நீங்கள் சுட்டி கொடுத்துள்ள பக்கங்களில் இந்தத் தகவல் இருப்பதாகத் தெரியவில்லையே. நான் தவறவிட்டுவிட்டேனா?

    பதிலளிநீக்கு