பக்கங்கள்

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

அங்காடித்தெரு அமெரிக்காவை முன்வைத்து

அமெரிக்கா வந்து இந்த இரண்டரை மாதங்களில், தவிர்க்கவே முடியாமல், இந்த நாட்டை நான் தினம் தினம் இந்தியாவுடன் ஒப்புமைப்படுத்தி புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். இந்தச் சூழலில் கடந்த ஞாயிறு அங்காடித்தெரு படம் பார்த்தேன். ஏற்கனவே அங்காடித்தெரு குறித்த தமிழ்ப் பதிவுகள் பலவற்றை படித்து படம் குறித்த ஒரு முன் தீர்மானத்தோடுதான் போனேன். ஆயினும் படம் என்னை உலுக்கிவிட்டது. படத்திலுள்ள சில குறைகளையும் (ஏற்கனவே பலரும் சுட்டிக்காட்டியதுதான்) மீறி இப்படம் குறிப்பாலுணர்த்தும் கடையிலும் அதைப் போன்ற மற்ற கடைகளிலும் படத்தில் காட்டுவதுபோல் நிகழ்வுகள் நடப்பதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ளதான யதார்த்தம் முகத்தில் அறைகிறது. படத்தின் அத்தனை செயற்கையான காட்சியமைப்புகள், அபத்தங்களையும் மீறி படம் பார்த்த அனைவரையுமே பாதித்திருக்கிறது. ஆயினும் இது திரைப்பட விமரிசனம் அல்ல. படத்தின் கரு ஏற்படுத்திய அதிர்வுகளை புரிந்துகொள்ள முயற்சிப்பதே என் நோக்கம்.

ஏன் இப்படி நடக்கிறது? இதைத் தடுக்க முடியாதா என்ற கேள்விகள் இயல்பாக எழுகின்றன. இவ்வாறான காட்சிகளை நேரிலேயே நாம் பார்த்திருந்தாலும், அனுபவித்திருந்தாலும், காட்சி ஊடகங்களில் பார்க்கும்போது அது வேறுவிதமான மனநிலையைத் தோற்றுவிக்கிறது. அமெரிக்கா வந்து இங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை, அமெரிக்க வெள்ளை இன மக்களைத் தவிர்த்து, ஊடகங்கள் வழியாக அறியும்போது எனக்கு சில எண்ணங்கள் தோன்றுகின்றன. எனக்கு இது குறித்து தெளிவான கருத்துக்கள் ஏதும் இன்னும் உருவாகவில்லை.

நான் தற்போது இருக்கும் கலிபோர்னியா மாநிலம் பெர்க்லியில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சார்ந்த ரெட்டிகாரு ஒருவர் நாற்பது வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் உடன் உணவகமும் நடத்துகிறார். இந்த ஊரின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவரது உணவகத்தில் வேலை செய்ய ஆந்திராவிலுள்ள அவரது பூர்வீக கிராமத்திலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் ஏழைச் சிறுமிகளை கொண்டுவந்து வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். வேலை நேரமும் அமெரிக்கச் சட்டத்திற்குப் புறம்பாக மிக அதிகமானதோடு இல்லாமல் அவர்களின் தங்குமிடம், உணவு போன்றவையும் இந்த நாட்டின் குறைந்த பட்ச தரத்தைவிடவும் குறைவு. இதையெல்லாம் விட கொடுமையானதாக அச் சிறுமிகளை தன் பாலியல் இச்சைகளை துய்க்கவும் பயன்படுத்தியிருக்கிறார். இவை எல்லாம் தெரிய வந்தது, அவ்வாறு அழைத்து வரப்பட்ட சிறுமிகளில் ஒருத்தி தான் தங்கவைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட கார்பன் மோனாக்சைடு வாயுக் கசிவால் உயிரிழந்த சோகம் நடைபெற்ற பின்புதான். இவை நடந்து தற்போது பத்து வருடங்களாகிவிட்டன. ரெட்டிகாருவும் எட்டு வருட சிறைத் தண்டனை அனுபவித்து தற்போது வெளிவந்து விட்டார்.

இதை போன்று பதிவர் வாஞ்சூர் அவர்கள் அமெரிக்கச் சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள் என்ற ஒரு இடுகை இட்டுள்ளார். அதன் மூலம் எப்படி சீனா மற்றும் தென்கிழக்காசிய ஏழைத் தொழிலாளர்கள் வால்மார்ட், கே மார்ட் போன்ற நிறுவனங்களால் அங்காடித்தெரு படத்தில் காட்டப்படுள்ளதைப் போன்று கசக்கிப் பிழியப்படுகிறார்கள்; மேலும் அவ்வாறு ஏழைத் தொழிலாளர்களை அழைத்து வருபவர்கள் அவர்களது சொந்த நாட்டு 'அண்ணாச்சிகளான' ஏஜண்டுகள் என்றும் தெரிய வருகிறது. அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்ச கூலி இவ்வளவு என்று கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆயினும் இதைவிடக் குறைவான சம்பளத்திற்கும் இங்கு ஆட்கள் கிடைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். மெக்சிகோவிலிருந்து கலிபோர்னியாவிற்கு சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் மிகக் குறைந்த கூலிக்கும் வேலைக்கு வர சம்மதிக்கிரார்கள், அவர்களை இங்குள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

நம்ம ஊர் மென்பொருள் நிறுவனங்களும் இதில் சேர்த்தி. என்ன, மேலதிகாரிகளிடம் அங்காடித்தெரு பணியாளர்கள் மாதிரி அடியுதை வாங்குவது இல்லை என்பது தான் ஒரே வேறுபாடு. மற்றபடி வேலையில் கசக்கிப் பிழிவது, நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் குறைவாகக் கொடுப்பது, இரண்டுபேர் எனக் கணக்குக் காட்டி ஒருவரை வைத்தே வேலை வாங்குவது என அடுக்கிக் கொண்டே போகலாம். நம்நாட்டின் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்கள் இதைபோன்ற காரியங்களை அமெரிக்காவிலும் செய்துவருகின்றன. ஆனால், பொதுவாக அமெரிக்கர்களினால் நடத்தப்படும் கம்பெனிகள் இவ்வாறு இல்லை எனச் சொல்லப்படுகிறது.

அதைப்போன்றே, என் துறையிலும், இந்தியாவில் ஆராய்ச்சி உதவியாளர்களாக சேர்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தைவிட குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. ஒருவரையே இரண்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துதல் போன்ற எல்லா புறம்பான காரியங்களும் நடக்கின்றன. இது நல்கை வழங்குபவர்களுக்கும் தெரியும். ஆயினும் அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள், ஏனெனில் அவர்களும் அப்படித்தான். கடந்த பத்து வருடங்களாக நான் வாங்கும் சம்பளமும் என் படிப்புக்கேற்ற சம்பளத்தைவிட கம்மிதான். ஆயினும் பல்வேறு காரணங்களுக்காக நான், குறை சொல்லிக்கொண்டே, தொடர்கிறேன். அமெரிக்காவில் அத்தைகைய மோசடிகள் என் துறையில் எனக்குத் தெரிந்து இல்லை. இவற்றைவிட, நம்ம வீட்டில் வேலைக்கு வரும் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் இருப்பதிலேயே குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு சம்மதிக்கும் ஆட்களைத்தான் நாம் சேர்க்கிறோம். அவர்கள் அதில் எப்படி குடும்பம் நடத்துவார்கள் என்பதைப் பற்றி எல்லாம் நாம் பொதுவாக நினைத்துப் பார்ப்பதே கிடையாது. இதன் பிரம்மாண்டமான வடிவம்தான் அங்காடித்தெரு அண்ணாச்சிகள்.

தற்போதைய என் அறை நண்பனுடன் முன்னொரு சந்தர்ப்பத்தில் இந்தியாவில் ஏன் இத்தகைய அத்து மீறல்கள் நடக்கிறது என உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார், நம் நாட்டில் ஒரே வேலைக்கு நூறு பேர் போட்டிபோடுகிறார்கள்; அதனால் இது சகஜம் என்று. இது எல்லா மூன்றாம் உலக நாடுகளுக்கும் பொருந்தும். அங்காடித்தெரு அண்ணாச்சி சொல்லும் 'எச்சிக் கையை உதறினால் ஆயிரம் பேர் வருவார்கள்' என்ற யதார்த்தம். இது இனம், நாடு, மொழி, உறவு போன்ற அனைத்தையும் தாண்டியது. இயல்பான மனித ஆசை. ஏன் அமெரிக்கர்கள், எனக்குத் தெரிந்தவரை, பெரும்பாலும் இவ்வாறான உரிமை மீறல்களை (தற்போது) செய்வதில்லை. அவர்கள் ஒன்றும் வானத்திலிருந்து குதித்தவர்கள் இல்லை. வெள்ளையின அமெரிக்கர்களும் அவர்களது மூதாதையர்களான ஐரோப்பியர்களுமே வரலாற்றில் அதிக மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியவர்களாக இருப்பர். அம்மனித சுரண்டல்கள் மற்றும் புதிய தேசமான அமெரிக்காவில் அவர்களுக்கு கிடைத்த எல்லையற்ற இயற்கை வளம் போன்றவை அவர்களை பொருளாதார வளர்ச்சியுறச் செய்தது. நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைக்கப் பெற்றது. அடிப்படைத்தேவைகள் பூர்த்தியானதால் போட்டி குறைந்தது. எனவே அடிமட்டக் கூலி போன்ற மனித உரிமை மீறல்கள் அமெரிக்கர்களால் தன் சக நாட்டவர்களுக்கு நிகழ்த்தப்படுவது இன்று பெருமளவில் இல்லை. ஏனெனில் சக நாட்டவர் எவரும் அத்தைகைய வேலைக்கு வருவதில்லை. மேலும் மனித உரிமை மீறல்கள் குறித்த சட்ட திட்டங்கள் கடுமையானதால் ஒருவகையான பயம் சராசரி அமெரிக்கனிடம் இருக்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு சட்டத்தை மீறுதல் ஒரு சாதாரண விஷயம். அதை அமெரிக்காவிலும் சென்று சிலர் செய்கின்றனர், மாட்டிக்கொள்ளாதவரை பிரச்சனை இல்லை என்ற வகையில்.

எல்லா நாடுகளும் பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டால் இத்தகைய அவலங்கள் நடக்காது என அனுமானிக்க முடியுமா? இது முதலாளித்துவ பொருளாதாரத்தின் பக்க விளைவா? மார்க்சியம் இதற்குத் தீர்வா? இவற்றை என்றாவது மனித சமூகத்திலிருந்து அகற்ற முடியுமா? தெரியவில்லை. காந்திய பொருளாதாரமும், காந்திய அறிவியல் தொழில் நுட்பமும் ஓரளவிற்காவது இத்தகைய அவலங்களை குறைக்கும் என்பது என்னுடைய எண்ணம். மனிதன் ஆசையை ஒழித்தால் இவற்றையும் வென்றெடுக்கலாம். ஆயினும் அது நடைமுறைச் சாத்தியமா?!

இவ்வகையிலேனும் சிந்திக்க வைத்த அங்காடித் தெருவிற்கு நன்றி.

4 கருத்துகள்:

  1. தங்கவேல்

    நல்ல சிந்தனை. இதற்கெல்லாம் மார்க்சியம் தீர்வல்ல ஆகமுடியாது என்பதை நமக்கு ரஷ்யாவும், சீனாவும் அடித்துக் கூறுகின்றன. அங்காடித் தெருவில் நீங்கள் பார்த்ததை விட ஆயிரம் மடங்கு கொடுமைகள் சீனாவில் இன்று நடக்கின்றன. அமெரிக்காவில் நீங்கள் சொல்லும் அத்துமீறல்கள் பரவலானது கிடையாது. சீனர்களை பாதாள அறைகளில் வைத்து மோசமாக வேலை வாங்குபவர்கள் சீன மாஃபியாக்களே. அவர்கள் பெரும்பாலும் பிடிபட்டு கடும் தண்டனைக்கு உள்ளாகிறார்கள். பாலி ரெட்டி குடும்பத்தினருக்கும் கடும் தண்டனை வழங்கப் பட்டது. மெக்சிக்கொவில் இருந்து வருபவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தாலும் கூட ஓரளவுக்கு வசதியாக இருந்து கொள்கிறார்கள். மோசமான கொத்தடிமைத்தனத்தை அமெரிக்காவில் காண முடியாது. இந்தியாவில் இருந்து பாடி ஷாப்பர்கள் மூலம் வரும் ப்ரோகிராமர்கள் கிரீன் கார்டு கிடைக்கப் பெறும் வரை குறைந்த சம்பளத்தில் காலம் தள்ளுகிறார்கள் என்பது உண்மையே. அதெல்லாம் பழைய கதை இப்பொழுது பாடி ஷாப்பிங் ஆட்கள் யாரையும் இந்தியாவில் இருந்து கொண்டு வருவதில்லை.

    தனி நபர் முதலாளிகளிடமிருந்து கார்ப்போரேட் கம்பெனிகளிடம் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற அங்காடிகள் கை மாறும் பொழுது ஊழியர்களை மோசமாக நடத்தும் தனி முதலாளிப் போக்குகள் குறையும்.

    அன்புடன்
    ராஜன்

    பதிலளிநீக்கு
  2. ராஜன் நான் படம் பார்க்க உதவிய உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. அங்காடித் தெரு காட்டும் சூழ்நிலையை வேறு இடங்களில் பொருத்திப் பார்ப்பது சிந்தனையை தூண்டுகிறது. நல்ல பதிவு, வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு