பக்கங்கள்

வியாழன், 5 ஜனவரி, 2012

காவல் கோட்டம் பாராட்டுவிழா

சென்னையை டிசம்பர் ஜனவரி மாதங்கள் எப்போதுமே புத்தக வெளியீடு சார்ந்த நிகழ்ச்சிகள், பாராட்டு விழாக்கள் நிறைத்திருக்கும். கடந்த இரண்டு நாட்களாக இவற்றில் சிலவற்றில் நான் கலந்துகொண்டேன். முந்தாநாள் தமிழினியின் 6 புத்தகங்கள் வெளியீட்டுவிழாவிலும், நண்பர் அரவிந்தன் நீலகண்டனின் ‘உடையும் இந்தியா’ நூல் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டேன். அது போல் நேற்று தமிழினி பதிப்பகத்தின் சார்பில் சாகித்திய அகாடமி பரிசுபெற்ற காவல்கோட்ட நாவலாசிரியர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவிலும் கலந்துகொண்டேன். இந்த மூன்று நிகழ்வுகளிலும் சு. வெங்கடேசனுக்கு நடந்த பாரட்டுவிழா மிக அருமையாக நடைபெற்றது. அதற்கான காரணம் அழைக்கப்பட்டிருந்த பேச்சாளர்கள்.

நான் இந்த நாவலை கடந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கி சென்ற ஜூலை மாதம் கிட்டத்த்ட்ட 10 நாட்கள் கால அளவில் படித்து முடித்தேன். எனக்கு நாவல் பிடித்திருந்தது. இது குறித்த என் கருத்துக்களை பின்னர் எழுதவேண்டும். என்வே பிறர் இந்நாவல் குறித்து என்ன பேசுகிறார்கள் என அறிந்துகொள்ளூம் பொருட்டும் விழாவிற்கு சென்றிருந்தேன். எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் கிட்டத்தட்ட அனைவருமே நாவல் குறித்தே பேசினார்கள். விழாவிற்கு தலைமை ஏற்றவர் ராஜேந்திர சோழன். அவரது உரை அவ்வளவாக எனக்கு ஞாபகமில்லை. ஆயினும் அதிகம் அவர் நாவலின் சிறப்பு குறித்து பேசவில்லையென நினக்கிறேன். பின்னர் பேச வந்த ச. தமிழ்ச்செல்வன் தஙக்ளது த.மு.எ. ச சங்க பொதுச் செயலாளரான சு. வெ. அகாடமி பரிசுபெற்றது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்ற ரீதியில் பேசினார்.

செல்வ புவியரசுவின் பேச்சும் நாவல் குறித்து சிலாகிப்பதாக இருந்தது, ஆயினும் அவரது நம்பிக்கை சார்ந்து நாவலில் வெளிப்படும் சில பகுதிகள், ஆரிய ஆதிக்கம்,  குறித்து மகிழ்வதாகக் கூறினார். பின்னர் பேசவந்த கண்மணி குணசேகரன் தனது வழக்கமான ஸ்டைலில் (பாடலுடன்) பேச்சை ஆரம்பித்தார். தான் இதுவரை இந்நாவலின் 100 பக்கங்களை மட்டுமே படித்துள்ளதாகக் கூறினார். ஆயினும் படித்தவரையில் சு. வெ. வின் எழுத்தாளுமை வியக்க வைப்பதாகக் கூறினார். அவரது பேச்சில் அரங்கில் அடிக்கடி சிரிப்பலைகள் எழுந்தன. சு. வேணுகோபால் பேசும்போது தனக்கும் சு.வெ.விற்கும் உள்ள உறவைக் குறித்து விளக்கிவிட்டு இந்நாவல் குறித்து தனது கருத்துக்களை விளக்கினார். இதுவரை பேசியவர்களில் சு. வேணுகோபாலின் உரையே சிறப்பாக இருந்தது. போரும் அமைதியும் போல தமிழில் நேற்றுவரை ஒரு வகைமை இல்லை. இன்று இந்நாவல் அக்குறையைப் போக்கிவிட்டது என்றார். இது மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்றைப் பேசுவதின் மூலம் தமிழனின் 2000 ஆண்டு காலத் தனிமையை விவரிக்கிறது என முத்தய்ப்பாகச் சொன்னார்.

நாஞ்சில் நாடனுக்கு தொண்டை சரியில்லாததால் அவரது உரையை ‘ஆழிசூழ் உலகு’ ஜோ டி குரூஸ் படித்தார். காவல் கோட்டத்துடன் பரிசிற்காக கடைசி வரை போட்டியிட்டது என அரசல் புரசலாகப் பேசப்பட்ட நாவலின் ஆசிரியரே அதற்கு வாழ்த்துரை வழங்க வந்தது நன்றாக இருந்தது. படிக்கப்பட்ட நாஞ்சிலின் உரையில் நாவல் குறித்த விமரிசனமோ வேறு சிலாகிப்போ அதிகம் இல்லை. பெரிதும் விருதும் அது சார்ந்த மன நிலைகளைப் பற்றியுமே இருந்தது என நினைக்கிறேன். கடைசியாக பழ. கருப்பையா பேச வந்தார். உள்ளதிலேயே அவரது உரைதான் மிகச் சிறப்பாக இருந்தது என எண்ணுகிறேன். தனக்கு நவீனத் தமிழ் இலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்புகளை படிக்கச் சொல்லிக் கொடுத்துவர் தமிழினி வசந்தகுமார் என்றாரம்பித்தார். தனக்கு எல்லா புத்தகஙக்ளையும் படித்து சிறந்தவற்றை அடையாளம் காண்பது நேரமின்மையால் இயலாதென்பதால் வசந்தகுமாரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்திருப்பதாகச் சொன்னார். இவரும் ஆரிய திராவிட ஒப்பீடுகளை நிகழ்த்தினார் எனினும் காவல்கோட்டம் குறித்த முக்கியமான அவதானிப்புகளைக் குறிப்பிட்டார்.

களவும் காவலும் எப்படி ஒன்றையொன்று பதிலீடு செய்துகொண்டன என நாவல் காட்டும் போக்கிலிருந்து உதாரணங்களை அடுக்கியவர், டாவோயிசத்தில் ஒரு மருத்துவன் பணி செய்யும் பகுதியில் நோய்கள் அதிகம் காணப்படும் எனில் அவன் அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்றும், எம் மருத்துவனின் நிலப் பகுதியில் நோய்கள் இல்லையோ அம்மருத்துவன் கேட்கும் தொகையை பிணியாளன் கொடுக்கவேண்டும் என்றும் உள்ளதாகச் சொன்னார். அதுபோல் நம் கலாச்சாரத்தில் ஒருவன் காவல் புரியும் பகுதியில் களவுபோனல் காவலாளியே இழந்த பொருட்களை மீட்டுக்கொடுக்கவேண்டும் என்பது அறம். அதைக் காவல் கோட்டத்தின் மூலம் அறியவந்தது என்றும் சொன்னார். அதற்கு மாறாக நவீன காவல்முறையை ஆங்கில ஆட்சியாளார்கள் புகுத்தியதால் ஏற்பட்ட அவலங்களையும் நாவல் காட்டுவதாகச் சொன்னார். இதனால் யாருக்கும் இன்று பொறுப்புணர்ச்சியில்லை என்றார். உதாரணமாக அக்காலத்தில் குளம் வெட்டுவதும், நீர்ப்பராமரிப்பும் அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்களின் பொறுப்பாகும், ஆனால் பொதுப் பணித்துறை என்ற மைய நிர்வாக முறை வந்ததும் நம் பராம்பரிய நீராதாரஙகளின் இன்றைய நிலைமையை ஒப்பிட்டார்.

ஆரியத்தை நாம் உள்வாங்கிச் செரித்துக்கொண்டோம், இஸ்லாமியத்தை செரித்துக்கொண்டோம் ஆயினும் நம்மால் ஆங்கிலேயனை செரித்துக் கொள்ள முடியவில்லை. கப்பலேறி அவன் போனபின்பும் இன்னும் அவன் நம்மை ஆட்டிப் படைத்துகொண்டிருக்கிறான் என்றார். இன்று நாம் கொண்டாடும் புத்தாண்டு, பிறந்த நாள் விழாக்கள் நம் கலாச்சாரத்தின் மீதான அவனது ஆதிக்கம் விடைபெறவில்லை என்பதையே காட்டுவதாகச் சொன்னார். இறுதியில் சு. வெங்கடேசன் ஏற்புரை வழங்கவந்தார். அப்போது மிகவும் நேரமாகிவிட்டபடியால் சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டார். வசந்த குமார் தனது காவல் கோட்ட கையெழுத்துப் பிரதியைப் படித்து முடித்தவுடனேயே சு. வெங்கடேசனின் மதுரையைப் பார்க்க காலை வைகை விரைவு வண்டியில் முன்பதிவு செய்யாத கோச்சில் வந்ததைச் சொன்னார். தனது படைப்பிற்கு தன்னைவிடவும் நேர்மையாக இருக்கும் வசந்தகுமாரை வெகுவாகப் புகழ்ந்தார். பொதுவாக எல்லாப் பேச்சாளார்களுமே தமிழினி வசந்தகுமாரைப் பாராட்டினார்கள். அவர் இதற்கு மிகவும் தகுதியானவர்தான். எனக்கும் அவரை நினைத்து பெருமையாக உள்ளது.

1 கருத்து: