பக்கங்கள்

ஞாயிறு, 28 ஜூலை, 2013

அடையாற்றின் கரையில்...மீண்டும்

சென்ற ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மணப்பாக்கம் அடையாறு கரையோரம் நடை செல்லலாம் என ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். அமுதன் பள்ளி விடுமுறைக்கு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டதால் வர இயலவில்லை. சீனிவாசனை தொடர்புகொள்ள செல்பேசியைத் தேடினால் காணவில்லை. அது கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கிடப்பதை பின்னர்தான் கண்டுபிடித்தேன். சின்னவன், ஆதிரனின் கைவண்ணம். எல்லாப் பொருட்களையும் கீழேவீசி விளையாடும் பருவத்தில் இப்போது உள்ளான் அவன். சீனிவாசன் முடிந்தால் வருகிறேன் என்று சொல்லிவிட்டார். செடிகளை எடுத்துக்கொண்டு வர பாலீதீன் கவரில் சிறிது மண், ஒரு கொத்தங்கரண்டியும் எடுத்துக்கொண்டேன். இதற்குள் மணி ஏழாகிவிட்டது. ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பி சிறிது தூரம் செல்லும்போதே மழைத்தூறல் போட்டது. இப்பகுதியில் இந்த வருடம் இதுவரையில் அளவுக்கதிகமாகவே மழை பெய்துள்ளது.  ஜுலை மாதம் பிறந்ததிலிருந்து 20 நாட்களாக தினமும் மழை பெய்துவருகிறது. வெயிலே இல்லை. எப்போது பார்த்தாலும் மேகமூட்டமாகவேயுள்ளது. எங்கள் வீட்டு கிணற்றில் ஒன்றரையடி அளவுக்கு தண்ணீர் மட்டம் ஏறியுள்ளது. பொதுவாக ஆடி மாதம் தண்ணீர்ப்பஞ்சம் உக்கிரம் அடையும். ஆனால் இந்தவருடம் நேர்மாறாக உள்ளது. காலைத் தூறலில் மணப்பாக்கம் - கெருகம்பாக்கம் சாலையை அடுத்த பகுதிகள் ரம்மியமாக இருந்தன. சென்னை மாநகராட்சிக்குள் இப்பகுதிகள் இரண்டாண்டுகளுக்கு முன்பே சேர்க்கப்பட்டுவிட்டாலும், இன்னும் சிலர் விடாப்பிடியாய்  முப்போகம் விளைவிக்கின்றனர். சில இடங்களில் திட்டுகளாக புதர்க்காடுகளும் உள்ளன. வண்டி ஓட்டும்போதே நாம் வீடுகட்டி வந்து இந்தச் சூழலைக் கெடுக்கிறோமே என்ற எண்ணம் தவிர்க்கமுடியாமல் வந்தது.

வண்டியை நிறுத்திவிட்டு சிறிது தூரம் கரையில் நடக்க ஆரம்பித்திருந்தேன். ஆற்றை ஒட்டிய கால்வாயில் தேங்கியிருந்த தண்ணீர் குட்டையிலிருந்து ஏதோ ஒன்று சட்டென்று அசைந்து அருகிலிருந்த புதருக்குள் சென்றது. அது ஒரு பறவை. செம்பொன் இறக்கைகளுடன் நீண்ட அலகுடன் இருந்தது. இன்று சற்று முன்பே வந்துவிட்டதால் போனவாரத்தை விட சற்றதிக ஆட்கள் தென்பட்டனர். மேலும் சிறிது தூரத்தில் நண்பர்கள் சுரேஷ் பாபுவும், சுவாமிநாதனும் நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். கொஞ்ச தூரத்தில் 20-30 மைனாக்கள் ஒரு இடத்தில் நிலத்தைக் கொத்தி எதையோ சாப்பிடுக்கொண்டிருந்தன. என் வருகையைப் பார்த்தும் அனைத்தும் ஒருசேர மேலெழும்பி பறந்தன. அப்போது பசுக்கூட்டம் ஒன்றும் கரையில் ஏற முன்னோக்கி வந்துகொண்டிருந்தது. அதில் தலைவி போலிருந்த பசு என்னை ஏறிட்டுப்பார்த்தது. பின்னர் என்ன நினைத்ததோ பின்னோக்கி வேகமாகத் திரும்பி ஓட்டமும் நடையுமாகச் சென்றது. அதைப் பின்தொடர்ந்து மற்ற பசுக்களும் திரும்பி வேகமாக நடந்தன. இந்த மைனாக்கள் ஏதும் சொல்லிவிட்டுச் சென்றனவோ என்னவோ?

எங்காவது சீந்தில் கொடி இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டே நடந்தேன். சிறிது தூரத்தில் வால்டர் தேவாரம் மாதிரி மீசை வைத்து தலைச் சாயம் பூசிய சற்றே வயதான மனிதரும் அவருடன் ஒரு நடுத்தர வயது மனிதர் மற்றும் 4 வயதுச் சிறுவன் ஒருவனும் எதிரில் வந்துகொண்டிருந்தனர். மீசைக்காரர் என்னையே உற்றுப் பார்த்தவண்ணம் வந்தார். அருகில் வந்ததும் "ஆர் யு கோயிங் ஃபார் வாக்கிங்? வாட் இஸ் இன்சைட் த பேக்?” என்றார். முதலில் நான், "எஸ், ஐ யம் கோயிங் ஃபார் வாக்கிங். ஐ வாண்ட் டு கலெக்ட் சம் பிளாண்ட்ஸ்” என்றேன். பின்னர் அனிச்சையாக பாலீதீன் கவரை விரித்து அவருக்குக் காண்பித்தேன். சட்டென்று ஏன் அவ்வாறு செய்தேன் என நினைத்து வெட்கப்பட்டேன். கேட்டவர் போலிஸ்காரராக இருக்கலாமோ என்ற அச்சம் என்னை அவ்வாறு செய்யவைத்திருக்கலாம். மேலும் நடக்கத்தொடங்கினேன். ஒரு கரிச்சான் பறவை ராக்கெட் மாதிரி செங்குத்தாக விர்ரென்று மேலெழும்பி சில அடிதூரம் சென்றுவிட்டு அதேமாதிரி மீண்டும் கீழே வந்தது. இவ்வாறே மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருந்தது. பின்னர் தான் கவனித்தேன், அருகிலிருந்த மரத்தில் வேறொரு கரிச்சான் உட்கார்ந்திருந்தது. ஒருவேளை அதன் இணையைக் கவர இது செய்யும் உத்தியோ என்னவோ! சில இளைஞர்கள் பைக்கில் சென்று யுவதிகள் முன்பு செய்யும் சாகசத்தை என் மனம் ஒப்பிட்டுக்கொண்டது.

தொடந்து நடந்து சென்றவாரம் சென்ற இடத்தைத் தாண்டினேன்.  சற்றுதூரத்தில் ஆற்றின் நடுவே தேங்கியிருந்த குட்டையில் வெண்ணிற அல்லி மலர்கள் பூத்திருந்ததன. மூன்று இளைஞர்கள் விலையுயர்ந்த புகைப்படக்கருவியை வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அருகில் சென்றபோதுதான் பார்த்தேன் வித்தியாசமான பறவை ஒன்று அல்லிகளுக்கு நடுவே நின்றுகொண்டிருந்தது. வெண்மையான சிறகுகள், வால் நீண்டிருந்தது. சற்று நீண்ட கால்கள். பறவையின் பெயர் அவ்விளைஞர்களுக்கும் தெரியவில்லை. ஆற்றின் மறுகரையில் விமான நிலைய சுற்றுச்சுவரோடு அமைந்த வடிகால் வழியாக மழைத்தண்ணீர் அடையாற்றிற்கு வந்துகொண்டிருந்தது.
இப்போது மரங்கள் குறைந்து பொட்டல்வெளி ஆரம்பமாகிவிட்டது. பெரிய செங்கல் சூளை ஒன்று வந்தது. முன்பு இப்பகுதிகளில் நஞ்சை விவசாயம் செய்யப்பட்டிருக்கவேண்டும். அடையாற்றில் வரும் தண்ணீரை மடைமாற்றி கால்வாய்கள் மூலம் வயல்களுக்கு கொண்டுசெல்ல அமைப்புகள் இன்னும் உள்ளன. சிறிதுதூரம் நடந்தவுடன் விமானநிலையத்தின் நீட்டிக்கப்பட்ட இரண்டாவது ஓடுதளம் அடையாற்றைத் தாண்டி மறுகரையில் கொளப்பாக்கம் கிராமம் வரை நீண்டிருந்தது.
இதற்குமேல் அடையாற்றின் கரையில் நடக்கமுடியாது. இப்பகுதியில் பலர் காலைகடன்களைக் கழித்துக்கொண்டிருந்தனர். கரையிலிருந்து மணப்பாக்கம் ஊருக்குள் செல்லும் வழித்தடத்தில் சிறிதுதூரம் சென்றேன். மழைபெய்து வழியெங்கும் நீர் தேங்கியிருந்தது. ஓடுதள பாலம் கட்ட பயன்படுத்தப்பட்ட கான்கீரீட் மிச்சங்கள் அங்கங்கே குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதனோடு ஊர்க்கழிவுகளும். மாதேஸ்வரன் கோபுரம் தெரிந்தது. சிறிது தூரம் இன்னும் நடந்தால் எங்கள் வீட்டை அடைந்துவிடலாம்.

திரும்பி நடந்தேன். கழுகு ஒன்று வானத்தில் வட்டமிட்டதை கவனித்தேன். நான் கடைசியாக கழுகைப் பார்த்தது எப்போது என்று ஞாபகமில்லை. கண்டிப்பாக பலவருடங்களிருக்கும். சிட்டுக்குருவியைப் போன்றே இப்போது கழுகுகளும் அரிதாகிவிட்டன. டைக்ளோபினாக் மருந்து  கொடுக்கப்பட்ட இறந்துபோன மாடுகளை உண்ணும் கழுகுகள் விஷமேறி இறந்துவிடுவதாகச் சொல்கிறார்கள். தொடர்ந்து நடக்கையில் அருகிலுள்ள கால்வாயில் தேங்கியிருந்த தண்ணீரில் எதோ அசைவுதெரிந்தது. முதலில் பார்த்த பறவையை போன்ற மற்றொரு பறவை வேகமாக அருகிலுள்ள புதருக்குள் சென்று ஒளிந்துகொண்டது. இம்முறை அதனை நன்றாகப் பார்க்கமுடிந்தது. கழுத்தற்ற உடல், அலகிலிருந்து வால் வரை இருமுனையிலும் கூரான பகுதிகள். குட்டைக்கால்கள். புதருக்குள் சென்று மறைந்தாலும் அதன் கால்கள் இப்போது நன்றாகத்தெரிந்தன. இம்முறை அருகிலேயே பறவையைக் கண்ணுற்றதால் காத்திருந்து அதை என் புகைப்படக்கருவியில் பதிவுசெய்ய நினைத்தேன். அதற்கு ஒரு காரணமும் உண்டு; ஜெயமோகன் முன்பு ஒரு கட்டுரையில் குருகு என்ற பறவை குறித்து அஜிதனுடன் உரையாடியதைப் பற்றி எழுதியிருப்பார். கொக்கை குருகு எனப் பொருள் மாற்றி படிக்கும்போது சங்கப்பாடலொன்று தரும் புதிய அர்த்தத்தை மிக அழகாக விளக்கியிருப்பார். ஏனெனில், குருகு ஆபூர்வமாகக் காணக்கிடைக்கும் ஒருபறவை. ஒருவேளை நான் பார்த்ததும் அப்பறவைதானோ என்ற ஐயம். எனவே புதரின் எதிர்புறமே குத்துக்காலிட்டு அமர்ந்து காத்துக்கொண்டிருந்தேன். பலவிதமான பறவையொலிகள். கீச் கீச் என்ற ஒலி கேட்டு மேலே பார்த்தால் சில சிட்டுக்குருவிகள்  பறந்து கொண்டிருந்தன. நான்கைந்து மாதங்களுக்கு முன்பு மேட்டுபாளையமருகிலுள்ள என் தங்கை வீடிருக்கும் பகுதியில் சிட்டுக்குருவிகளைப் பார்த்தபின் இப்போதுதான் அவைகளைப் பார்க்கிறேன்.
பறவை வெளிவருவதாயில்லை. இப்போது அதன் கால்களும் தெரியவில்லை. புதருக்குள் நன்கு சென்றுவிட்டது. ஆகவே இடம் மாற்றி சற்றுதள்ளிச் சென்றமர்ந்தேன். மணி ஒன்பதாகி விட்டிருந்தது. ஒரு அரைமணி நேரம் அப்பறவைக்காக செலவிடலாமென மனதுக்குள் தீர்மானம் பண்ணிக்கொண்டேன். பல்வேறு பறவையொலிகள் கேட்டுக்கொண்டேயிருந்தன. கரிச்சான்கள், மைனாக்கள், கிளிகள், குருவிகள், காக்கைகள் இன்னும் பெயர்தெரியாத பலவிதமான பறவையொலிகள், பின்னர் தவளைகளின் சத்தம், வண்டுகளின் ரீங்காரம் என இனம்பிரித்து அறிந்துகொண்டேயிருந்த என் மனம் சட்டென்று என் காலடியில் குர் குர் என கேட்கும் ஒரு நுண்ணிய ஒலியில் சென்று அவதானித்தது. எறும்புகள், குட்டி வண்டுகள் போன்ற உயிரினங்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. ஆனால் அந்த சத்தம் எந்த உயிரினத்திலிருந்து வருகிறது என கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் பூமிக்குள்ளிருந்துதான் சத்தம் வந்தது. மிக நுண்ணிப்பாய் கவனித்தால் மட்டுமே அந்தச் சத்தம் கேட்கும். ஒருவகையில் அந்தக் கணம் தியானம் கைகூடுவது போலத்தான். மீன் பிடிப்பவர் ஒருவரும், மெல்லோட்டம் ஒடுபவர் ஒருவரும் என்னைக் கடந்து சென்றனர். இனி, அந்தப் பறவை புதரிலிருந்து வெளிவருவதற்கு வாய்ப்பில்லை.

நடக்க ஆரம்பித்தேன். இருபது கிலோமீட்டர் நீளமேயுடைய அடையாறு சில இடங்களில் மிக அகலமாக இருந்தது. தென் மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் இதைவிட நீளமான ஆறுகள் பல கூட இவ்வளவு அகலமாக நான் பார்த்ததில்லை. மிக அதிகம் தண்ணீர் வந்தாலொழிய இவ்வளவு அகலமாக ஆறு மாறியிருக்காது.
சென்ற 2005 மழைக்காலத்தில் செம்பரம்பாக்கம் நிறைந்து உபரி தண்ணீர் திறந்துவிடப்பட்டபோது அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. அப்போது செம்பரம்பாக்கம் கலங்கல் (மறுகால்) சென்று அந்த அரிய காட்சியை புகைப்படங்களாகப் பதிவுசெய்திருக்கிறேன். உண்மையில் சென்னையைச் சுற்றிய தொண்டை மண்டலத்தில் சராசரியாக வருடத்திற்கு 1400 மில்லி மீட்டர் மழைபெய்கிறது. இம்மழை நீரை நம் முன்னோர் ஏரி, தாங்கல், குளம், குட்டை எனப் பல்வேறு வடிவங்களில் சேர்த்து வைத்திருக்கின்றனர். முப்போகம் விளைவித்திருக்கின்றனர். பசுமைப்புரட்சி சாதித்ததைவிட மிக அதிக நெல் விளைச்சலை எடுத்திருக்கின்றனர். ஆனால், நம்மைப்போல் மிக மோசமாக நீர் மேலாண்மை செய்யும் சமூகம் இன்று  வேறில்லை.

எனக்கு அடையாற்றின் மேலுள்ள காதலுக்கு வரலாற்றுப் பின்புலம் உண்டு. என் முப்பாட்டனாரின் பாட்டனார் காலத்தில் (1780 - 90 களில்), கிழக்கிந்திய கம்பெனியின் வரிக்கொடுமைக்கு அஞ்சி விவசாய நிலங்களை விட்டுவிட்டு,  மாங்காட்டிலிருந்து கடலூர் மஞ்சக் குப்பம் சென்று அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து குடியேறியிருக்கிறார்கள் எம்முன்னோர்கள். எனவே ஸ்ரீவியில் அவர்கள் குடியேறிய தெரு மஞ்சக்குப்பம் தெரு என்றானது. அது இப்போது மஞ்சப்பூ தெருவாக மருவிவிட்டது. தாங்கள் மாங்காட்டிலிருந்து  கொண்டுவந்த தங்கத்தை விற்று ஸ்ரீவியில் நிலங்களை வாங்கி விவசாயத்தை தொடர்ந்திருக்கின்றனர். இந்தத் தொடர்பு விட்டுப்போகக் கூடாது என்பதற்காக எங்கள் தாத்தா எல்லாத் திருமணப் பத்திரிக்கைகளிலும் மாங்காடு வித்துக்கிளார் கோத்திரம் என்றே அவரது பெயருக்குப் பின் போட்டுகொள்வார். சமீப காலம் வரை எங்கள் குடும்பதை மாங்காட்டார் குடும்பம் என்றே ஸ்ரீவியிலும் அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். சென்ற 2006-ல் முகலிவாக்கத்தில் வீட்டுமனை வாங்கும்போதே நம் முன்னோர் வாழ்ந்த இடத்திற்கே நாமும் வந்துவிட்டோம் என அப்பாவிடம் சொன்னேன். செம்பரம்பாக்க ஏரித்தண்ணீரில் இன்று விவசாயம் செய்யவில்லை எனினும் அந்த நீரையே நிலத்தடி நீர் மூலமாக நாங்கள் குடித்துக்கொண்டிருக்கிறோம்.

சில ரங்கூன் கொடிகளை எடுத்துக்கொண்டேன்.
வரும்வழியில் குயில்போன்ற சிறிய பறவை, ஆனால் சற்று பொன்னிறமும், சாம்பலும் கலந்த நிறத்தில், தலையில் ஒரு சிறிய கொண்டையுடன் என் குறுக்காக பறந்துசென்றது. வண்டியை அடையும்போது மணி பத்தாகி விட்டிருந்தது. பசிக்க ஆரம்பித்தது. ஐ ஏ எஸ் காலனிக்குச் சென்று சில பாதாம் மரக் கன்றுகளை எடுக்கலாம் என யோசிக்கும்போது செல்பேசி சிணுங்கியது. எதிர்பார்த்த மாதிரியே பவானியிடமிருந்து. சட்னிக்கு தேங்காய் வாங்கிவட்டு வராம இன்னும் என்ன பண்ணிட்டிருக்கீங்க என சற்று எரிச்சலுடன் கேட்டார். பாதாமை விட்டுவிட்டு தேங்காய் வாங்க வீட்டிற்கு வண்டியை விட்டேன்.

குறிப்பு: நான் பார்த்தது குருகு தான். இந்த அபூர்வ பறவையை ஒரே நாளில் இரண்டுமுறை பார்க்கமுடிந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

2 கருத்துகள்:

  1. This orange coloured bird is known as Naanal Kokku, commonly seen in places where there are Naanals.

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள பிரதீப் ஆச்சரியமாகயிருக்கிறது. எப்படியிருக்கிறாய்? நலம்தானே?

    குருகு பற்றி என் கட்டுரையில் உள்ள இணைப்பைச் சொருகி படிக்கவும். மிக அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு